தபால் ஊழியரிடம் செயின் பறிப்பு - துரத்தி பிடித்து கொள்ளையனுக்கு பொதுமக்கள் தர்ம அடி
சங்கர்
மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட காஞ்சிரக்கோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் லேகா (44). நட்டாலம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாமூட்டுகடை- பாண்டியன்விளை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். நெட்டியான்விளை பகுதியில் வைத்து, லேகாவின் பைக்கின் பின்னால் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், திடீரென லேகாவின் பைக் மீது மோதினார். இதில் அவர் நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்தார். லேகா எழ முயற்சி செய்த போது மர்ம நபர், திடீரென லேகாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டவாறு மர்ம நபருடன் கடுமையாக போராடினார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத கொள்ளையன் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்களில் சிலர் கொள்ளையனை நீண்டதூரம் துரத்தி சென்று பிடித்தனர். எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த கொள்ளையன், செயினை அங்கிருந்த ஒரு தோட்டத்தில் வீசினான். ஆனாலும் பொதுமக்கள் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்து, செயினை வீசியதாக கூறிய தோட்டத்தில் தேடினர். பலமணி நேரம் தேடியும் செயின் கிடைக்க வில்லை. எனவே கொள்ளையனையும், அவர் ஓட்டி வந்த பைக்கையும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செயினை பறித்த நபர் ஐரேனிபுரம் ஆரியூர் கோணம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கரை கைது செய்தனர்.