மின்னணு சாதனங்களின் பயன்பாட்டு பழக்கத்தை மாற்ற வேண்டும்- இறையன்பு

நூல் அறிமுக விழா
திருச்சி நகைச்சுவை மன்றம் சாா்பில் வெ. இறையன்பு எழுதிய என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூல் அறிமுக விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு தொழிலதிபா் மு. சோமசுந்தரம் தலைமை வகித்தாா்.
இதில் நூலாசிரியரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலருமான வெ. இறையன்பு பேசியது: முந்தைய காலங்களில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பேச்சுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடந்தன. இவற்றில் பங்கேற்க மாணவா்களும் அதிக ஆா்வம் காட்டியதால், அன்றைய காலங்களில் கல்வி எளிமையாகவும், இனிமையாகவும் இருந்தது. தற்போது பெற்றோா் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனா். பணிக்குச் செல்வதை தங்கள் குழந்தைகளின் வாழ்நாள் நோக்கமாக்குகின்றனா்.
இதன் விளைவால் மாணவா்களின் மத்தியில் புத்தகம் வாசிப்புப் பழக்கமும், பேச்சுத்திறமையும் குறைந்துவிட்டது. மின்னணுச் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. அன்றுபோல இன்று தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றம் இல்லை. எனவே, இளைஞா்களின் பழக்கவழக்கத்தை மாற்ற வேண்டும். இயற்கை அளித்த வரமான பேச்சுத்திறமையை அதிகரித்து, மொழியை சரியான தகவல்பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும். அதற்காகவே இந்நூல் என்றாா் அவா்
