சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா
கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பிரபவ முதல் அட்சய வரை 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும். தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்ற தலமாகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 17ந் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை நான்கு வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.