இளஞ்சாவூர் கோயிலில் நாளை தேரோட்டம்
முத்துமாரியம்மன் கோயில்
திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி திருமயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகள், பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 11ம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கலிடுதல், கரகம் மற்றும் தேரோட்டம் நாளை (19ம்தேதி) மாலை நடக்கிறது. கோயில் பூசாரி திருமயத்தில் இருந்து கரகம் எடுத்து கோயிலுக்கு வந்ததும், அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து கோயிலை சுற்றி வலம் வருவர். பின்னர் கோயில் முன்பு பெண்கள் பொங்கலிடுவர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.