கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் சாரங்கா கோஷம் விண்ணதிர முழங்க, தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். '

அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள்பாலிக்கிறார். தாயார் கோமளவள்ளி பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைபெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப்பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 15ம் தேதி காலை சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருள, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் சாரங்கபாணி கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான, அலங்கரிக்கும் போது சுமார் 110 அடி உயரமும், 47 அடி அகலமும், 500 டன் எடையும் கொண்ட சாரங்கபாணி கோயில் பெரிய தேரின் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேரோட்டத்தை கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு குழு தலைவர் ஆர்.கே.பாஸ்கர், செயல் அலுவலர்கள் சிவசங்கரி, கிருஷ்ணகுமார் ஆகியோர் சிதறு தேங்காய் உடைத்து, தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இந்த சித்திரை பெரிய தேரின் தேரோட்டத்தில் அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சாரங்கா சாரங்கா என்ற கோஷம் விண்ணதிர முழங்க, தேரின் வடம் பிடித்து இழுத்து விழாவை சிறப்பித்தனர்.

மேலும், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் மேற்பார்வையில், தேரோட்டத்தின்போது தேரின் அருகே முன்னும் பின்னும் வெளி நபர்கள் செல்லாதவாறு இருக்கவும், தேரோட்ட நிகழ்வில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் நேரா வண்ணம் இருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுத்திடவும் ஏராளமான போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story