நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.