சாத்தூர் : நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார வாக்குவாதம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற சேர்மன் குருசாமி தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் முன்னிலை வகித்தார் சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகர்மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் திட்ட அறிக்கை குறித்து விவாதங்கள் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வார்டு பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை திட்ட பணிகள் முறைப்படி சரியான முறையில் நடைபெறவில்லை என்றும் மேம்போக்கான பணிகளை நடைபெற்று வந்ததால் பல்வேறு பகுதிகளில் இடர்பாடுகள் ஏற்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். குடிநீர் குழாய் இணைப்பிற்கு பின் தெருக்களில் பல மாதங்கள் ஆகியும் சாலைகள் போடப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர் என்றும் கவுன்சிலர்கள் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.
மேலும் தெருக்களில் பழைய திருவிளக்குகளை அகற்றி புதிய எல்இடி மற்றும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் வெளிச்சம் குறைவாக இருப்பதாலும் முற்றிலும் இருட்டாக காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தனர். மேலும் மேல காந்தி நகர் பகுதியில் மகளிர்க்காண பொது சுகாதார வளாகம் முறையாக செயல்படவில்லை என்றும் இருக்கும் சுகாதாரம் சீர்குலைந்து காணப்படுவதாகவும் இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலை கடன்களை முடிக்க பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் பொது வெளிகளில் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுவதாகவும் இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த கவுன்சிலர் அதற்கு பதில் மாற்றாக வேறு சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பொதுவாக சாத்தூர் நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என பல கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இன்றைய கூட்டம் காரசாரமாக வாக்குவாதத்துடன் நடைபெற்றது. இறுதியாக பேசிய சேர்மன் மற்றும் ஆணையாளர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.