செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா!

செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், வழிபாடு நடக்கிறது.

நாமக்கல் - சேலம் செல்லும் சாலையில் செல்லப்பம்பட்டியில், பிரசித்தி பெற்ற சுயம்பு மகா மாரியம்மன் கோயில் உள்ளது. 300 ஆண்டு பழமையான இக்கோயிலில், ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு விழா, ஏப்ரல் 10ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

நேற்று (ஏப்., 29), காலை, 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை (ஏப். 30), இரவு 7 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைத்தல், மற்றும் மாவிளக்கு பூஜை நடக்கிறது.நாளை புதன்கிழமை மே- 1ம் தேதி, காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெறும். இரவு 7 மணிக்கு, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மே 2ம் தேதி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு ‌குத்தி அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

மே, 3ம் தேதி, காலை 8 மணிக்கு, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் கோயிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று மதியம், 2 மணிக்கு, பிரசித்தி பெற்ற காட்டேரி வேடம் அணிந்து ஊர்வலம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு, வண்டி வேடிக்கையில், கடவுள் வேடம் அணிந்து பக்தர்கள் புராண காட்சிகளை ஊர்வலமாக நடத்துவார்கள். மே 4ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். தொடர்ந்து, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கும். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story