காய்கறி, பழங்களில் வேதி பொருட்கள் - ஆட்சியர் எச்சரிக்கை

காய்கறி, பழங்களில் வேதி பொருட்கள் - ஆட்சியர் எச்சரிக்கை

ஆட்சியர் சரயு 

காய்கறி, பழங்களில் கார்பைட் கற்கள் அல்லது வேதிபொருட்கள் தெளித்தோ விற்பனை செய்யக்கூடாது.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காய்கறி /கனி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி மற்றும் வாழைப்பழம், சப்போட்டா ஆகிய இதர பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிபொருள்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விறப்னை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கால்சியம் கார்பைடு கற்களையோ அல்லது செயற்கை வேதி பொருள்களை தெளித்தோ பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொது மக்களுக்கு உணவு பாதை அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவையும் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது என்பதனை தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வில் கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிப் பொருள்களை தெளித்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களை கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அறிவுறுத்தியதுக்கு பிறகும் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த நபர் மீது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். ஆகவே பொது மக்களின் நலன் கருதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி, பழ அங்காடி வணிகர்கள் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், உணவு பாதுகாப்பு சட்டத்தில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு செய்றகை முறையில் பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விறபனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வோர் அனைவரும் இந்த சட்டத்தினை முழுமையாக கடைபிடித்து தங்களது உணவு வணிகத்தினை பதிவு அல்லது உரிமம் பெற்று நுகர்வோர் அனைவருக்கும் பாதுகாப்பான தரமான காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story