விருதுநகரில் புதிய அறிவுசார் மையங்களை திறந்து வைத்த முதல்வர்


அறிவுசார் மையத்தை திறந்து வைத்த முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக இன்று(05.01.2024) தமிழ்நாடு முழுவதும் ரூ.1933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் விருதுநகரில் ரூ.1.88 கோடி மதிப்பிலும், அருப்புக்கோட்டையில் ரூ.1.88 கோடி மதிப்பிலும் மற்றும் திருவில்லிபுத்தூரில் ரூ.1.75 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய அறிவுசார் மையங்கள், சிவகாசி மாநகராட்சியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய நகர்ப்புற சுகாதார நல மையம் மற்றும் ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிய நகர பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், விருதுநகர் கல்லூரி சாலை, நகராட்சி பூங்கா அருகிலுள்ள மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவுசார் மையத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.
தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அறிவுசார் மையக் கட்டிடம் திறன் மேம்பாட்டு அறை, இளைஞர் வாசிப்பு பகுதிகள், மகளிர் வாசிப்பு பகுதி, சிறுவர் வாசிப்பு பகுதி, கணினி பயன்பாட்டு வாசிப்பு பகுதி உள்ளிட்ட வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் 434 சதுரடி மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூல்கள், கலை, அறிவியல், பொருளாதார, பொறியியல், சட்டம், மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவு நூல்கள், பொது அறிவு நூல்கள், கலைக் களஞ்சியங்கள் இந்த அறிவுசார் மையங்களில் உள்ளன. இந்த மையங்கள் மூலம் பொதுமக்கள், இளைஞர்கள் பயன்பெறுவதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
மேலும், அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளில், புதிய மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், சிவகாசி மாநகராட்சியில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் புதிய நகர பொது சுகாதார ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


