பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர்
திட்ட பணிகள் தொடங்கி வைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.43கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டகப்பாடியில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டங்களையும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், களரம்பட்டி, மேலப்புலியூர் பகுதிகளில் தலா ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டங்களையும், வேப்பந்தட்டை ஒன்றியம் பெரியவடகரையில் ரூ.10.93 லட்சம் மதிப்பிலும்,
வேப்பூர் ஒன்றியம் கீழப்பெரம்பலூரில் முறையே ரூ. 11.97 லட்சம், ரூ.14 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டடங்களையும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மொத்தம் ரூ.515.83 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரூ.42.72 லட்சம் மதிப்பிலும்,
செஞ்சேரி மற்றும் ரஞ்சன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ரூ. 84 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.126.72 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கட்டடங்களைப் பார்வையிட்டார்கள். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா, சேகர் வட்டாட்சியர்கள் சரவணன், சத்தியமூர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.