மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  - அமைச்சர் எ.வ.வேலு  துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம் 

திருவண்ணாமலை நகராட்சி சன்னதி தெரு, செவ்வா மடத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று "மக்களுடன் முதல்வர்" முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மரு.கி.கார்த்திகேயன், செய்யார் சார் ஆட்சியர் பல்லவி, மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் இரா.ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: "மக்களுடன் முதல்வர்" என்ற இந்த திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிமையாகவும் சென்று சேர்த்திட வழிவகுக்கும் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர் கல்லூரியில் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற உடன் மக்களின் மனநிலை அறிந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக அரசின் அனைத்து துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வகையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது நமது திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். பின்பு ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தாக மக்களின் பிரச்சனைகளை 100 நாட்களில் தீர்க்கும் வகையில் தனித்துறையை உருவாக்கி முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தை உருவாக்கினார். அத்துறையை துவக்கிய உடன் 26 இலட்சத்திற்கு மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தது. பொதுமக்களிடம் இருந்து வந்த மனுக்கள் அடிப்படையில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டம், புதுமைப் பெண், காலை உணவு திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டம் துவக்கப்பட்டது.

கடந்த 14.12.2023- ஆம் தேதி இத்திட்டம் துவக்கி வைக்க ஆணை பிறப்பித்தார். இப்போது உடனடியாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் யாராக இருந்தாலும் முதல்வரை தேடி சென்று மனு அளிப்பது தான் வழக்கம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக நேரடியாக களத்திற்கே சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பல்வேறு அரசு துறைஅதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வு செய்து இருக்கிறார். நமது முதல்வர் மக்களுக்கு அவர்கள் இருக்குமிடம் தேடி அரசு துறை அதிகாரிகள் சேவைகளை வழங்க வேண்டும் என்று இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தலைமையிலான அரசில் நான் உணவுத் துறை அமைச்சராக இருக்கும் போது கூட்டுறவு கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டம் துவக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் 65 ரூபாய் இருந்த துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 25 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் இன்று வரைக்கும் பொது விநியோக கடைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. அதற்கு காரணம் அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தான். கூட்டுறவு சங்கங்களில் வாங்கும் பொருட்களில் ஏதாவது குறை இருந்தால் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிலச்சீர்திருத்தம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். திருவண்ணாமலையில் 2006 2011 காலகட்டங்களில் பட்டா கொடுப்பதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு முதலமைச்சர் அவர்களிடம் கூறி 10 வருடம் வசிக்கின்றவர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என முடிவு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றேன். அதன் விளைவாக, முதலமைச்சர் அவர்கள் அப்போது ஆணையிட்டார்கள். மத்தளங்குளம் மற்றும் தேனிமலை, நான் வசித்த பாலாஜி நகரில் காலம் காலமாக கட்டியிருந்தார்கள். பட்டா கிடைக்கவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களிடத்தில் கூறி திருவண்ணாமலையில் 10,000 பேருக்கு பட்டா வழங்கினேன். இப்பொழுது நகர எல்லையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பட்டா கொடுக்க கூடாது என்று அணையுள்ளது. இதை நமது தமிழ் நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றுயுள்ளேன். 2006 2011 வரை தமிழ்நாட்டிலே அதிக அளவில் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு பட்டா கொடுத்துள்ளேன். நீதி தவறாத மாமன்னன் மனுநீதி சோழன் என்ற புத்தகத்தை படித்து இருக்கிறேன். மன்னனை பார்க்க வேண்டுமென்றால் பொதுமக்கள் பல சிரமங்களை தாண்டி வர வேண்டும் என்று நினைத்து மனுநீதி சோழன் தனது அரண்மனைக்கு வெளியிலே மணி ஒன்றை கட்டி வைத்தார்.

பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அந்த மணியை அடிப்பார்கள். உடனே மன்னன் வெளியே வந்து அந்த பிரச்சனையை பொதுமக்களுக்கு தீர்த்து வைப்பார். அது போல நமது முதல்வர் அவர்களும் மனுநீதி சோழன் போல் பொதுமக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார். இன்று கோவையில் மக்களை தேடி மனுக்களை பெறுகிறார். நமது மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம். விவசாயிகளை அதிகமாக கொண்டுள்ள மாவட்டம், ஆகையால் இந்த மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். நமது திருவண்ணாமலை கோயில் உலக புகழ்ப்பெற்ற கோயில் அக்கோயில் வளர்ச்சி அடைந்தால் நாமும் வளர்ச்சி அடைவோம். ஆதற்காக தான் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இந்த மாவட்டத்தில் நடுத்தர மக்கள் தான் அதிகமாக உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் மனு வாங்கிய 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். அது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆரணி, சைதாப்பேட்டை, கே.பி.கே ஜானகிராமன் திருமண மண்டபத்தில் நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு இன்று காலையில் பெற்ற மனுக்களின் உடனடி தீர்வாக 15 நபர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி (திருவண்ணாமலை), தனலட்சுமி (ஆரணி), நகராட்சி ஆணையர்கள் தட்சணாமூர்த்தி (திருவண்ணாமலை), கே.பி.குமரன் (ஆரணி), நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, வட்டாட்சியர்கள் தியாகராஜன்(திருவண்ணாமலை), மஞ்சுளா (ஆரணி) மற்றும் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story