அநாகரீகமாக பேசிய அமைச்சர் முதல்வர் வெட்கப்பட வேண்டும்: பொன்.ஆர்
செய்தியாளர்களை சந்தித்த பொன்.ஆர்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கூட்டணி கட்சிகளின் துணையோடு கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஆசியோடும், ஆதரவோடும் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். இன்று நமக்கு தேவை கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி. அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கு மோடியின் மூன்றாவது பருவத்தின் ஆட்சி தொடரும் என்பது உலகம் அறிந்த உண்மை. கடந்த மோடி ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கடந்த 5 ஆண்டில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
சில திட்டங்கள் கைவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் இந்தியாவின் தலைசிறந்த மாவட்டங்களின் முதல் மாவட்டமாக வரவேண்டும் என்பதுதான் இலக்கு. இளைஞர்களுக்கு தொழில் வளம் பெருக வேண்டும் என்ற கடமையை பொறுப்பாக எடுத்துள்ளோம்.
போதைபொருட்கள் தடுப்பதை மாநில அரசால் செய்யமுடியவில்லை. அதுபோன்று கனிமவள கடத்தலை தடுக்க முடியவில்லை என தமிழக அரசு ராஜிநாமா செய்யட்டும்..கனிமவள கடத்தலை எப்படி தடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும்.
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை மேடையில் வைத்துக்கொண்டே பிரதமரை மிகமிக கொச்சையான முறையில் கேவலப்படுத்தி பேசியிருக்கிறார். அந்த வார்த்தையை அவர் பயன்படுத்திய அடுத்த நிமிடமே, கனிமொழி காலில் கிடக்கும் செருப்பால் அவரை அடித்திருப்பார் என அங்கிருந்த தி.மு.க சகோதரர்களும், சகோதரிகளும் நிச்சயமாக நினைத்திருப்பார்கள்.
அது நிகழவில்லை. இவ்வளவு கேவலமான ஒருவரை அமைச்சராக வைத்திருக்கும் முதல்வர், தனது அமைச்சரவையை பற்றி வெட்கப்படவேண்டும், தலைகுனிந்து நிற்க வேண்டும். தமிழன் என்பதற்கு அருகதை அற்ற மனிதர்களை அங்கு வைத்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட மனிதரை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். உங்கள் கட்சி மேடையை அசிங்கப்படுத்தியவர் என நீங்களே அவர்மீது வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
அதற்கு தவறும் பட்சத்தில் அந்த வார்த்தையை நீங்கள் அத்தனைபேரும் சொல்லியதற்கு சமம் என நான் கருதுகின்றேன்" என்றார்.