முதல்வர் ஸ்டாலின் 25ஆம் தேதி தூத்துக்குடி வருகை
முதல்வர் ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிப்ரவரி 25-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை : தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிப்ரவரி -25 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தருகிறார். அதன்படி 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக பாளைரோடு தூத்துக்குடி புறவழிச்சாலை வழியாக சில்லாநத்தம் கிராமத்தில் 15,000 கோடியில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பின் காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க நிவாரணத்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என 15,000 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கி விழா பேரூரை ஆற்றுகிறார்.
கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அனைத்திலும் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள்,
தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம். என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.