”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் ஆட்சியர் ச.உமா ஆய்வு


வெண்ணந்தூரில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் ஆட்சியர் ச.உமா ஆய்வு.
நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” 18.12.2023 அன்று துவங்கி, 29.12.2023 வரை 9 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் திருச்செங்கோடு வார்டு பகுதிகளுக்கு கூட்டப்பள்ளி, பொன்னுசாமி திருமண மண்டபத்திலும், குமாரபாளையம் வார்டு பகுதிகளுக்கு ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபத்திலும், வெண்ணந்தூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பூபதி மாரியம்மன் மண்டபத்திலும், வேலூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பழைய கரூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் திருமண மண்டபத்திலும், ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சி, பூபதி மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்று வரும் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் ஆர்.எஸ்.எஸ்.இராஜேஸ், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் அ.வே.சுரேந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


