முதல்வர் பிறந்தநாள் - திமுகவினருக்கு மா.செ கோரிக்கை
ராஜேந்திரன் எம்.எல்.ஏ
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் கட்சியில் உழைப்பு, தியாகம், நிர்வாக திறமை, கண்ணியம் மிக்க பண்பு என கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்த தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
அவரது 71-வது பிறந்தநாளான நாளை கட்சி நிர்வாகிகள், தமிழ் மொழி, தமிழ் இன உணர்வு கொண்ட பொதுமக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும் நாள் ஆகும். இவ்வளவு சிறப்புகளை பெற்ற தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள மாநகர பகுதிகளில் உள்ள வார்டு மற்றும் தெருக்கள் தோறும், பேரூர் ஊராட்சிகளில் உள்ள கிளைக்கழகங்கள் தோறும், கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஏழை, எளியவர்கள், மாணவ, மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாட வேண்டும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் சொல்லிற்கேற்ப கடந்த 2½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில உலகத்தின் பல நாடுகள் பாராட்டுகிற வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் ஆட்சி நடத்தி சாதனை படைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.