அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பூமாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் மேம்பாட்டு கழக அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பட உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ள சமையல் உபகரணங்களை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 256 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 14,830 மாணவ மாணவியர்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 2 பள்ளிகளில் 187 மாணவ மாணவியர்களும், தோவாளை வட்டத்தில் 3 பள்ளிகளில் 250 மாணவ மாணவியர்களும், இராஜாக்கமங்கலம் வட்டத்தில் 10 பள்ளிகளில் 427 மாணவ மாணவியர்களும், குருந்தன்கோடு வட்டத்தில் 8 பள்ளிகளில் 475 மாணவ மாணவியர்களும், தக்கலை வட்டத்தில் 6 பள்ளிகளில் 289 மாணவ மாணவியர்களும், திருவட்டார் வட்டத்தில் 6 பள்ளிகளில் 358 மாணவ மாணவியர்களும், கிள்ளியூர் வட்டத்தில் 10 பள்ளிகளில் 1296 மாணவ மாணவியர்களும், மேல்புறம் வட்டத்தில் 8 பள்ளிகளில் 760 மாணவ மாணவியர்களும், முஞ்சிறை வட்டத்தில் 16 பள்ளிகளில் 1140 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 69 அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் 5182 மாணவ மாணவியர்களுக்கு வரும் ஜூலை 15ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபீஜாண், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தசாந்தி, உதவி திட்ட இயக்குநர் வளர்மதி, அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.