குழந்தை கடத்தல் - சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர் கைது
பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 9 வயது சிறுமியை அடையாளம் தெரியாத சிலர் காரில் வந்து கடத்த முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. இது குறித்து தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இரா. முத்தமிழ்ச்செல்வன், மாவட்டக் குழந்தைகளுக்கான உதவி கரங்கள் கண்காணிப்பாளர் அஜிதா, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அதுபோன்ற சம்பவம் நிகழவில்லை என்பதும், சம்பந்தப்பட்ட சிறுமி தெரிவிக்காத தகவல்களையும் மிகைப்படுத்தி சிறுமி கடத்தல் என மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது காசிம் மகன் ஜாபர் சாதிக் (38) தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது. வதந்தியைப் பரப்பி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக தஞ்சாவூர் மாவட்டக் குற்றப்பிரிவினர் வழக்குப் பதிந்து ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். இது போன்று பொதுமக்களிடையே யாராவது வதந்தியைப் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.