சிறார் வதை : தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி 2014- ஆம் ஆண்டு நகரிலுள்ள கவரிங் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, இவருக்கும், அக்கடையின் அருகேயுள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த தொழிலாளியான ஒரத்தநாடு அருகே உள்ள உஞ்சியவிடுதியைச் சேர்ந்த சிவா என்கிற பிரமோத் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. - இந்நிலையில், சிறுமியிடம் ஊட்டியில் தனது உறவினர் பள்ளிக்கூடம் நடத்தி வருவதாகவும், அதில் சேர்த்து விடுவதாகவும் சிவா கூறினார். மேலும் சிறுமியை சிவா வலுக்கட்டாயமாக ஊட்டிக்கு அழைத்துச் சென்று அங்கு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனிடையே, தனது மகளைக் காணவில்லை என தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, அச்சிறுமியை மீட்டு, சிவாவை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 31 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.