சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் காளிமுத்து(17). லட்சுமணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் காளிமுத்து அவரது தாய் மகேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார்.
மகேஸ்வரி மருத்துவப் பணியாளராக இருந்து வருகிறார். சிறுவன் காளிமுத்து ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு அதற்கு மேல் படிக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் காளிமுத்து நேற்று மாலை வெளியே செல்வதாக கூறிச் சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர். காலை வரை சிறுவன் வீடு திரும்பவில்லை என்பதால் சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்தபோது சிறுவன் காளிமுத்து நேற்று மாலை 3 மணி அளவில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி கிடங்கில் குளிக்க சென்றதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்த போது சிறுவனின் செருப்பு மற்றும் உடைகள் கிடங்கு தண்ணீர் அருகே இருந்துள்ளது. இதனை அடுத்து சிறுவன் காளிமுத்து நீரில் மூழ்கிய உயிரிழந்திருக்கலாம் என உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு துறைக்கும், ம.ரெட்டியபட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிடங்கில் தேங்கியுள்ள நீரில் இறங்கி சிறுவன் காளிமுத்துவின் உடலை தேடி வருகின்றனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீரில் தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கிடங்கில் 250 அடி வரை தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.