சிட்பண்ட் மோசடி - கடையில் பொருட்கள் அள்ளி சென்ற மர்ம கும்பல்
பொருட்கள் சூறை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தனியார் சிட்பண்ட் நிறுவனம் உள்ளது. இங்கு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலித்து பட்டாசு, இனிப்பு, மளிகைப்பொருட்களை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 5 லட்சம் பேர் சீட்டு கட்டியுள்ளனர். இதன் மூலம் பலகோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையின்போது பொருட்கள் வழங்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சிட்பண்ட் நிறுவனத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளிச்சென்றனர். நிறுவனத்திற்கு சொந்தமான மளிகைகடை, ஓட்டலை சூறையாடினர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அருவாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏஜென்ட் வசந்தமேரி என்பவர் செய்யாறு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நிறுவன உரிமையாளர் அல்தாப்தாசிப்பை கடந்த மாதம் 13ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அந்த தனியார் சிட்பண்ட் நிறுவன தலைமை அலுவலகத்தின் கீழ் உள்ள மளிகைகடையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பருப்பு, எண்ணெய், உப்பு, மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் டேபிள், சேர்கள், மின் விசிறிகள் உட்பட லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்களை அள்ளிச்சென்றனர். இதில் சிலர் பொருட்களை மூட்டைகளில் நிரப்பி தூக்க முடியாமல் சாலையில் இழுத்துச்சென்றனர். கடையில் பலர் சேர்ந்து சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி சின்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கடையில் இருந்தவர்களை விரட்டியடித்து கடையை பூட்டினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.