சித்தேரி கரையை உடைப்பு; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
அரியலூர், ஏப்.29- அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த சித்தேரியில் தற்பொழுது வெயில் காலத்தில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் ஏரிக்கரையின் ஒரு ஓரத்தில், சமூக விரோதிகள் சிலர் ஏரிக்கரையை உடைத்துள்ளனர். இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இது தொடர்ந்தால் ஏரியில் உள்ள அனைத்து நீரும் வெளியேற்றப்பட்டு, சித்தேரி நீரின்றி வறண்டு போய்விடும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வல்களில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஏரியிலிருந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்துவதோடு, ஏரிக்கரையை உடைத்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரியலூர் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.