சிவன்மலையில் பக்தர்கள் சித்ரா பௌர்ணமி கிரிவலம்
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு இருந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்தது. இது சித்ரா பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று கோயில்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். உலகின் பாவ புண்ணிய பலனை அறிய, சிவபெருமான் பார்வதி மூலம் தங்கப் பலகை கொண்டு வர சொல்லி அதில் சித்திரம் அமைத்தார். அதை பார்த்து வியந்த பார்வதி, இந்த சித்திரத்தை பேச வைக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார்.
சிவனும் மந்திர உபதேசம் செய்து, அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து, அதற்கு சித்திர புத்திரன் என்று பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் சித்தா பௌர்ணமி நாளில் அவதரித்தார். அண்ட சராசரங்களில் உள்ள அனைவரின் பாவ, புண்ணிய கணக்குகளையும் தினமும் தனக்கு தெரிவிக்கும் படி உத்தரவு பிறப்பித்திருந்தார் சிவபெருமான். அதன்படி சித்திர புத்திரனார் எமலோகத்தில் இருந்து இருந்து கணக்குகளை எழுதி வருகிறார். எனவே இந்த நாளில் விரதமிருந்து அவரை வணங்கினால் அவர் மனிதர்களின் பாவக்கணக்குகளை குறைத்து நற்பலன்களை வழங்குவார் என்பது நம்பிக்கை.
இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவதுடன், முருகனையும் அம்பாளையும் வழிபடுவதும் சிறப்பாகும். இதனை முன்னிட்டு காங்கயம் அருகே உள்ள சிவன்மலை கிரிவலப்பாதையில் மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு சிவன்மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் ஊர்வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் , மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.