சித்ரா பவுர்ணமி : வ.உ.சி. பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்
பூக்கள் விற்பனை
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் வறட்சியின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து இருந்தது. முகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்களின் விலை குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி பூக்கள் விலை திடீரென உயர்ந்து இருந்தது.
ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முல்லை பூ கிலோ ரூ.360-க்கும், அரளி பூ ரூ.240-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300-க்கும் டேபிள் ரோஜா ரூ.250-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.320-க்கும், சாமந்தி கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.