தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா 14ம் தேதி துவக்கம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா வருகிற 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடக்கிறது.
சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடியேற்றப்படும். பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.45மணிக்கு மேல் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் மேள வாத்தியங்களுடன் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நாட்களில் துனமும் நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.