குமரியில் 7 கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

X
குமரி மாவட்டத்தில் ஏழு கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 26-ந்தேதி இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரத்திலும், பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலுக்கு 30 அடி உயரத்திலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 25 அடி உயரத்திலும், களியல் மகாதேவர் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் மற்றும் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு தலா 23 அடி உயரத்திலும் பனை மரங்கள் நாளை (சனிக்கிழமை) பனந்தோப்புகளில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். மறுநாள் 26-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ, தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை செய்து வருகிறது.
Tags
Next Story
