எல்.முருகனை ஆதரித்து நடன இயக்குனர் கலா பிரசாரம்
நீலகிரி தொகுதி பா.ஜ.க., வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க., வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு ஆதரவாக பிரபலங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நமீதா பா.ஜ.க., வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் இன்று திரைப்பட நடன இயக்குனர் கலா, பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக ஊட்டி ஐந்து லாந்தர் , ஏ.டி.சி., திடல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். ஏ.டி.சி., திடல் அருகே போதிய தொண்டர்கள் இல்லாததால் வாகனத்திலிருந்து பேசுவதை நிறுத்திவிட்டு பஸ்சுக்காக நின்றிருந்த மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பொதுமக்கள் ஒரு சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நடன இயக்குனர் கலா நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி தொகுதியில் பா.ஜ.க., நல்ல முறையில் வெற்றி பெறும். பா.ஜ.க., வின் வளர்ச்சி தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் இதை மறைக்கிறார்கள். நான் இப்போது மோடி மற்றும் அண்ணாமலைக்காக தான் வந்துள்ளேன். நீலகிரி தொகுதியில் வெற்றி வேட்பாளராக எல். முருகன் உள்ளார். எல்.முருகன் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் பிரச்னைகள் அவருக்கு எளிதாக புரியும். இப்போதைய கவுன்சிலர்கள் கூட எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்.
அவர்களை உடனடியாக பார்க்க முடியாது. ஆனால் மத்திய இணை அமைச்சரான எல்.முருகனை எப்போது வேண்டும் என்றாலும் பொதுமக்கள் பார்க்கலாம். ஊட்டி கடந்த பல வருடங்களாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. ஒரு காலத்தில் ஊட்டியில் ரஜினி, கமல், சிரஞ்சீவி என பல இடங்களில் சினிமா படப்பிடிப்பு நடக்கும். ஒரு சின்ன கோடம்பாக்கமாக ஊட்டி இருந்தது. ஆனால் இப்போது எந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடப்பதில்லை. நீலகிரி தொகுதிக்கு எல். முருகனால் தான் வளர்ச்சி கொண்டு வர முடியும். அவர் தான் நேரடியாக மோடியிடம் பேசக்கூடியவர். நீலகிரியில் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய தேவையாக உள்ள ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வர அவர் பாடுபடுவார். இவ்வாறு அவர் கூறினார். .