ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு கீழதெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 03 மாதமாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து சாலைமறியல் கைவிடபட்டது. இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.