பொதுமக்கள் திடீர் மறியல் அரசு பஸ்கள் சிறை பிடிப்பு
சாலை மறியல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 41 -வது வார்டுக்கு உட்பட்ட சாஸ்தா நகர் பகுதியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ரூ. 51 லட்சம் செலவில் மழை நீர் ஓடை மற்றும் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. மேயர் மகேஷ் இந்த பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மழை நீர் ஓடைக்காக சாலை தோண்டப்பட்டது. பின்னர் திடீரென பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பணிகள் எதுவும் நடக்கவில்லை. சாலை தோண்டப்பட்டு பாதியில் நின்றதால் அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.
குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் வீடுகளில் இருந்து வெளியே வர பெரும் சிரமம் அடைந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் இன்று காலை நாகர்கோவில் பறக்கை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததுடன் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களையும் சிறை பிடித்தனர்.
இது குறித்து அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வார்டு கவுன்சிலர் அனிதா சுகுமாரன் என்பவரும் இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களை தொடர்புகொண்டு பேசினார். இதை அடுத்து பணிகள் உடனடியாக தொடங்கு என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.