தேங்கி கிடக்கும் சாக்கடையால் பொதுமக்கள் அவதி
புளியாலில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே புளியாலில் ரோட்டின் ஓரம் சாக்கடை கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், துர்நாற்றம், நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் அமைந்துள்ளது. ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பள்ளி, நர்சிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இங்கு வீடுகள், தொழில் நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுநீரை ஊருக்கு வெளியே கடத்தி செல்ல கால்வாய் வசதி செய்யவில்லை. இதனால், தெருக்களில் ஓடும் கழிவுநீர் ராமேஸ்வரம் ரோட்டில் குளம் போல் தேங்கி கிடக்கின்றன.
இந்த கழிவுநீர் அருகில் உள்ள கண்மாயிலும் கலப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. சாக்கடை கால்வாய்களில் செப்டிக்டேங்க் கழிவுகளையும் விடுவதால், புளியால் மக்களுக்கு பல்வேறு நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. பல கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்