பொதுமக்கள் கருப்புக் கொடியுடன் வெள்ளநீரில் இறங்கி போராட்டம்
போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் சடையனேரி குளம் உடைந்து, பல ஊா்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில், வட்டன்விளை கிராமத்தை தண்ணீா் சூழ்ந்ததால் மக்கள் போக்குவரத்து வசதியின்றி வெள்ளாளன்விளை கிராமத்தின் தேவாலயப் பகுதி வழியாக வெளியூா்களுக்கு சென்று வந்தனா்.
இதனால், கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்பட்டதால் மாணவா்கள், வியாபாரிகள், தொழிலாளா்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா். தண்ணீா் தேங்கி நிற்கும் வட்டன்விளை வடக்குத் தெரு தாா்ச்சாலை வழியாக பரமன்குறிச்சி-மெஞ்ஞானபுரம் பிரதான சாலைக்கு தற்காலிகமாக மணல் கொட்டி இணைப்பு வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமையில் ஊா் மக்கள் திரண்டு, கருப்புக் கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், கிராம நிா்வாக அலுவலா் கணேசபெருமாள், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு வாரத்துக்குள் சாலை வசதி செய்து தரப்படும் என கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.