சிஐடியு ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் தர்ணா
தர்ணா போராட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட சிஐடியு ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரங்கராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணி செய்யும் தூய்மை பணியாளர் , குடிநீர் பணியாளர் , ஓட்டுநர் மற்றும் டி பி சி ஊழியர்களுக்கு அரசாணை 2(D)எண் 62ன் படி தினசரி ஊதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாநகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் திருப்பூரில் நீதிமன்ற உத்தரவுப்படியும் , மாநகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படியும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இபிஎப் , இஎஸ்ஐ தொகைகள் ஒப்பந்தம் நிறுவனங்களின் பங்களிப்புத் தொகையுடன் முறையாக செலுத்துவதில்லை என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கும் , டிபிசி ஊழியர்களுக்கும் தினசரி ஊதியமாக ரூபாய் 753 வழங்க வேண்டும். குடிநீர் பணியாளர்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் தினசரி ஊதியமாக 792 ரூபாய் வழங்க வேண்டும் ஈபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பிடித்தங்கள் நிறுவனங்களின் பங்கு தொகையோடு முறையாக தொழிலாளர் கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் மூர்த்தி , துணை தலைவர்கள் உன்னிகிருஷ்ணன், பாலன், பூண்டி நகராட்சி மன்ற உறுப்பினர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்