பாஜக கூட்டணி படுதோல்வி - வாக்காளர்களுக்கு சிஐடியு மாநிலக்குழு நன்றி 

பாஜக கூட்டணி படுதோல்வி - வாக்காளர்களுக்கு சிஐடியு மாநிலக்குழு நன்றி 

சிஐடியு மாநிலக்குழு கூட்டம் 

மதவெறி பாஜக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்த வாக்காளர்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும் சிஐடியு மாநிலக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைச் செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன், கே.ஆறுமுகநயினார், தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் ம.கண்ணன், மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் மாநிலக் குழு உறுப்பினர் என்.பி.நாகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு - பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு தலைமை வகித்த, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு, சிஐடியு தமிழ் மாநிலக் குழு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றிய அரசின் மக்கள், தொழிலாளர், விவசாயிகள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்திய பாஜக மோடி அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்திய கூட்டணி, வெறும் தேர்தலுக்காக கூட்டு சேர்ந்த அணி அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மதவெறி பாஜக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்த வாக்காளர்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய சிஐடியு தோழர்களுக்கும் சிஐடியு மாநிலக்குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொண்டு வருவதற்காக 1973 இல் திமுக அரசால் நிறுவப்பட்ட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், ஆண்டுக்கு 20 கோடி லாபம் ஈட்டி வருகிறது. இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட்டு, தொடர்ந்து மாநில பொதுத்துறை நிறுவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி, திருநெல்வேலி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை தனியார் நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்து வருகின்றனர். தலைமுறை, தலைமுறையாக தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், தேயிலை உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்க வேண்டும். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம், சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக மூடுவதாக அறிவித்து அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பசுமை நிறுவனம், ஆலையை தொடர்ந்து நடத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ஆலை நிர்வாகம் ஆலையை மூடுவதிலேயே குறியாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதை அரசு கணக்கில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இயங்கி வந்த என்.டி.சி பஞ்சாலைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்திய போதிலும், மோடி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய நிலையில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்த நிலையில், துறை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதால், குழுவின் செயல்பாடு முடங்கியுள்ளது. இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். பஞ்சாலைகளில் பயிற்சியாளர்களுக்கான குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்து அரசு அறிவித்த பிறகும், ஆலை நிர்வாகிகள் குறைந்த கூலியை வழங்கி வருவதால், தமிழ்நாடு அரசு தலையிட்டு, குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 12 (3) ஒப்பந்தப்படி பருவகாலப் பணியாளர்களை காலி பணியிடங்களில் நிரப்பிட வேண்டும். 2013 - 2016 பணிபுரிந்த பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் 20 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணிவரன் முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்கிடவும், தொழிலாளர்களுக்கு சாதகமான நீதிமன்றத் தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். மதுபான விற்பனையை தனியார் மயமாக்கும் எஃப் எல்-2 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்குவதை கைவிட வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கிடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு குறித்து கமிட்டி அமைத்து பேச்சு வார்த்தையை நடத்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும். வாரியத்தை பல கூறுகளாக பிரிப்பதை கைவிட வேண்டும். பாரம்பரிய பட்டு, கைத்தறி, குத்துவிளக்கு பட்டறைத் தொழிலை பாதுகாக்க வேண்டும். ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை சார்ந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாவில் கயிறு தொழிற்சாலை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நல வாரிய பணப் பயன்களை விரைந்து வழங்க வேண்டும். நலவாரிய கணினி சர்வர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story