குலசேகரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
டாக்டர் வராததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் குலசேகரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த உண்ணியூர்கோணம் பகுதியில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய தும்பக்கோடு பகுதியை சேர்ந்த டென்னிஸ் (35)என்பவரை அந்த பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து பிறகு டாக்டர் ஒருவர் வந்துள்ளார். அவர் டென்னிசை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து அறிந்ததும் டென்னிசன் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் டென்னிசை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்து, ஆத்திரமடைந்தவர்கள் மருத்துவமனையை முற்றுனையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு ஏற்படாமல், இரவு பத்தரை மணி வரை போராட்ட நீடித்தது. தொடர்ந்து குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து எழுத்து மூலம் புகார் கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.