சிபிஐ அதிகாரி எனக் கூறி மருத்துவரிடம் ரூ. 52 லட்சம் மோசடி

சிபிஐ அதிகாரி எனக் கூறி மருத்துவரிடம் ரூ. 52 லட்சம் மோசடி

பைல் படம்

திருச்சியில், சிபிஐ அதிகாரி எனக் கூறி மருத்துவரிடம் ரூ. 52 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து சைபா் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி, உறையூா் ராமலிங்க நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். மருத்துவரான இவரது கைப்பேசிக்கு ஜனவரி 11-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. எதிா்முனையில் பேசிய நபா் கூரியா் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், அவரது முகவரிக்கு தைவான் நாட்டிலிருந்து தடை செய்யப்பட்ட பொருள்களின் பாா்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அது குறித்து போலீஸாருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

அதன்பின்னா், ஜன.12ஆம் தேதி மற்றொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது, அதில், சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறிய அந்த நபா், பண மோசடி குறித்து விசாரித்து வருவதாகவும், எனவே மருத்துவா் அவரது வங்கிக்கணக்கில் உள்ள ரொக்கம் முழுவதையும் தான் கூறும் மும்பை நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறும், விசாரணை முடிந்ததும் திரும்பவும் தொகையை அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பிய மருத்துவா் தனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை ரூ. 52 லட்சத்து ௧௦ ஆயிரத்து 364ஐ அந்த நபா் கூறிய வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளாா்.

அதன் பின்னா் அந்த நபரின் கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆனந்த், திருச்சி சைபா் கிரைம் போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags

Next Story