தேவாலயத்தில் இரு பிரிவினர் மோதல்: போலீசார் குவிப்பு
தூத்துக்குடி சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி 1ம் ரயிவே கேட் அருகே, தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான பரி பேட்ரிக் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் குருவாக செயல்படும் செல்வின் துரை என்பவரது தலைமையில் புதிய சேகர கமிட்டி பதவியேற்ற பின்பு கமிட்டி உறுப்பினர்கள் கோயில்பிச்சை, தேவராஜன், எஸ்டிகே ராஜன், ரூபன் ஆகிய 4பேரை கமிட்டியில் இருந்து நீக்கி உள்ளனர்.
இதை தொடர்ந்து குருவானவர் செல்வின் துரை மற்றும் எதிர் தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக காவல்துறை மற்றும் வருவாய் துறை தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பரி பேட்ரிக் தேவாலயத்தில் எந்தவித சேகர கமிட்டி கூட்டமும் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பரி பேட்ரிக்கு ஆலயத்தில் வைத்து சேகர கமிட்டி கூட்டம் நடத்தப்படும் என குருவானவர் செல்வின் துரை நேற்று வாட்ஸ்அப் மூலம் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் தேவாலயத்தில் உள்ளே சென்று கூட்டம் விதிமுறைகளை மீறி நடத்துகிறீர்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
காவல்துறையினர் இரு பிரிவினரையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.