அறந்தாங்கி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
புதுக்கோட்டை அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கான பணத்தை விரைவில் செலுத்தக் கோரி, மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலர் க முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியுசெயலர் அ. ஸ்ரீதர், அறந்தாங்கி ஒருங்கிணைப்பாளர் ஆர். கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: அறந்தாங்கி நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த நிலையில், 154 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கான நிதியை ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனம் செலுத்தவில்லை. இதனை விரைவாக செலுத்த வேண்டும். மாத ஊதியத்தை 7ஆம் தேதிக் வழங்க வேண்டும். இஎஸ்ஐ அட்டை மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.