சேவூர் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த கிளினிக் மூடல்
திருப்பூர், : சேவூர் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த கிளீனிக்கை அதிகாரிகள் மூடினர். சேவூரை அடுத்துள்ள சாவக்காட்டுப்பாளையத்தில் முறைகேடாக கிளினிக் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி, தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண் பாபு, சேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் யாகசுந்தரம், சேவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இருந்த சித்த மருத்துவர் பெரியசாமி நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை கொண்டு சிகிச்சை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்த போது, சித்த மருத்துவர் பெரியசாமி நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக்கு அலோபதி மருந்துகளை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதுபோல் அங்குள்ள செவிலியர்கள் அவர் பயன்படுத்தி வந்த ஊசி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் ஆகியவற்றை அருகில் உள்ள காலி இடத்தில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கிளினிக்கை மூடினர். மேலும், பெரியசாமியை இன்று (புதன்கிழமை) சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.