தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும், பல்வேறு துறைகள் மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு, ”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், நாளை டிச.23 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, தஞ்சாவூர் மாநகராட்சியில், என்.கே.ரோடு, காவேரி ஹால், கும்பகோணம் மாநகராட்சியில் பேச்சியப்பன் தெரு, பாலாஜி மஹாலிலும், சோழபுரம் பேரூராட்சி ஜி.எஸ்.டி திருமண மண்டபம், மெலட்டுர் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பனந்தாள் வேலவன் திருமண மண்டபம், திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியிலும், மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியான கடகடப்பை சமுதாயக் கூடம், பாபுராஜபுரம் ஊராட்சி நூலகத்திலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசின் பல்வேறு துறைகளில், கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு, அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு, அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.