ஊதிய உயர்வு கோரி தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஊதிய உயர்வு அறிவிக்கக் கோரி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கால தாமதமின்றி நகர கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களுக்கும், தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும். பதவி உயர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அங்காடி விற்பனையாளர்களுக்கு அங்காடிப் பணிகளைத் தவிர, வீடு, வீடாகச் சென்று டோக்கன் கொடுத்தல், வருவாய்த் துறையினர் செய்ய வேண்டிய இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியைத் திணித்தல், விரல் ரேகை பதியச் சொல்லி கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட கூடுதல் பணிப்பளுவைக் கைவிட வேண்டும். 2021-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார். டாக்சிரியா அமைப்பின் மாநில இணைச் செயலர் ஆர்.துரைக்கண்ணு சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் எம்.மணிவண்ணன், டி.ஜெய்சங்கர், கே.செல்வம், கே.சத்தியமூர்த்தி, என்.வேலாயுதம், எஸ்.செங்குட்டுவன், எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story