தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு - பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடிப்பு

தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு - பொக்லைன் இயந்திரங்கள்  சிறைபிடிப்பு
சிறை பிடிப்பு 
கொண்டலாம்பட்டி அருகே குத்தகை விவசாய நிலத்தில் தென்னை மரங்களை வெட்டிய பொக்லைன் இயந்திரங்களை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரிடம் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஜெயராமனின் விவசாய நிலத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த நிலத்தை ஒருவர் விலைக்கு வாங்கி விட்டதாகவும், எனவே, நிலத்தை காலி செய்யுமாறு கூறி தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை பொக்லைன் எந்திரங்கள் மூலம் வெட்டி சாய்த்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் தோட்டத்தில் உள்ள பசுந்தீவன பயிர்களையும் அழிக்க முயன்றனர். இதுபற்றி அறிந்த ஜெயராமன் மற்றும் விவசாயிகள் அங்கு வந்து தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நிலத்தில் உள்ள பயிர்களை அழித்தால் தற்கொலை செய்து கொள்வதாக கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தென்னை மரங்களை சிலர் வெட்டி சாய்த்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story