கோவை மாநகராட்சி மேயர் ராஜினாமா!
பைல் படம்
கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார். கோவை மாநகராட்சி 19வது வார்டில் கவுன்சிலர் ஆக கல்பனா ஆனந்தகுமார் முதல்முறையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான இவருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்த சீனியர்கள் பலர் கவுன்சிலராக இருக்கும் நிலையில் அனுபவம் இல்லாத கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியினருடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்ததுடன் திமுக கவுன்சிலர்களையும் உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை அவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து திமுக தலைமைக்கு சென்றது. நாடாளுமன்ற தேர்தலிலும் சிறப்பாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக மேயர் ராஜினாமா செய்ய இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட பொழுது தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக மேயர் கல்பனா தெரிவித்து இருப்பதாகவும், உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா ராஜினாமா செய்து இருப்பதாக தெரிவித்தார். சட்டத்துக்கு உட்பட்டு அடுத்து என்ன பணிகள் செய்ய வேண்டுமோ அந்த பணிகள் செய்யப்பட இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பி்ரபாகரன் தெரிவித்தார்.