பள்ளிக்கு ரூ. 448 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளிக்கு ரூ. 448 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளிகளுக்கு நன்கொடை அளிக்க பலர் முன் வருவதாக தகவல்

கோவை:பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆதார் பதிவு திட்டத்தை காளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் தொடக்கி வைத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது எனவும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கான சாதி சான்றிதழ்,இருப்பிட சான்றிதழ்,அவர்களது பெற்றோரின் வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தபடும் என கூறினார். நான்காவது பெற்றோர் மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்று வருவதாகவும் திருப்பூர்,நீலகிரி,ஈரோட்டை சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர் எனவும், இது போன்ற மாநாட்டின் வாயிலாக முதலமைச்சர் கொண்டுவந்த திட்டங்கள் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்புணர்வாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

50க்கும் மேற்பட்ட திட்டங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தரப்பில் நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்த அவர் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளிகளுக்கு நன்கொடை கொடுத்ததை போல நிறைய பேர் கொடுக்க முன் வருவதாகவும் நன்கொடை அளித்தவர்களை அழைத்து கவுரவிக்கப்படுத்துவதின் வாயிலாக அவர்கள் மகிழ்ச்சி அடைவது எங்களை ஊக்கப்படுத்துகிறது என தெரிவித்தார்.

நான்கு மாவட்டத்தில் மட்டும் இதுவரை அரசு பள்ளிகளுக்கு ரூ. 448 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் பலர் 1 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை நன்கொடையாக வழங்க பத்திரங்களை கொடுத்து சென்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 5வது பெற்றோர் மாநாடு நடைபெற உள்ளது எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரும் ஊக்கத்தின் அடிப்படையில் மாநாடு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது என்றார்.

முன்னதாக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

Tags

Next Story