மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து வாடகைப் பாத்திரக்கடை சேதம்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து வாடகைப் பாத்திரக்கடை சேதம்

மேல்நிலைநீர் தேக்க தொட்டி இடிப்பு

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கும் போது, அருகில் இருந்த வணிக வளாகத்தில் விழுந்து வாடகை பாத்திரக் கடை சேதமடைந்தது.

சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள குருவிக்கரம்பையில் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதன் அருகே ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 30 அடி உயரத்தில் பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமையன்று ஜேசிபி இயந்திரம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது. அப்போது இப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திடீரென இடிந்து, அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ராமசாமி என்பவர் நடத்தி வந்த வாடகை பாத்திரக் கடையின் மேல் விழுந்தது. இதில் பாத்திரக் கடையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250க்கும் அதிகமான பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் சேதமடைந்தன.

வணிகவளாகத்திற்கு எதிரே தனியார் வங்கி, அருகில் போக்குவரத்து சாலையில் ஆட்கள் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ராமசாமி கூறும்போது, "நான் சுமார் 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு இருந்து வருகிறேன். இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை இடிக்கும் போது முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்கும் போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறுகின்றார்.

தொட்டியை இடிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது என தெரியவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சியில் இருந்து கட்டப்பட்ட வணிக வளாகத்தில் ஒருகடை மட்டுமின்றி கட்டிடமே பல்வேறு இடங்களில் விரிசல் விழுந்து உள்ளது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளேன். காவல்துறையிலும் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Tags

Next Story