அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஆட்சியர் வளர்மதி ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சந்தைமேட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனை, பிரசவம், மகப்பேறுக்கு பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தினமும் ஏராளமான புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
இந்த காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் காவேரிப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து அதற்கான இடம், கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பு மற்றும் மாத்திரைகள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு இருக்கிறதா என்பது குறித்து மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.