சிருவாச்சூர் பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

சிருவாச்சூர் பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

சமையற்கூடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 

சிருவாச்சூர் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு சமைக்கப்படும் விதம் குறித்தும், தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்,. ஜனவரி-12ம் தேதி இன்று காலை 7 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா, சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றதா, எரிவாயு உருளைகளுடன் உள்ள அடுப்பு பாதுகாப்பான முறையில் கையாளப்படுகின்றதா, குறித்த நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாரப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் ஆகியவை முறையாக சுவையாக சமைக்கப்படுகின்றதா என்பதை சமையலருடன் அருகில் இருந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் , உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 தொடக்கப் பள்ளிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி பகுதியில் 247 தொடக்கப் பள்ளிகள் என மாவட்ட முழுவதும் 267 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் தினந்தோறும் 16,174 மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் 267 பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் திட்டத்தின் செயல்பாடு குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த பல்வேறு நிலையிலான 95 அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நியமித்துள்ளார்.

அதன்படி மாவட்ட முழுவதும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டு அதன் தகவல்களை அறிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது சத்துணவு பிரிவு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

Tags

Next Story