நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற நாகை மாணவர்களை வாழ்த்திய ஆட்சியர்
மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற நாகப்பட்டினம் அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு அளவில் அரசுப் பள்ளி மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் 38 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல். தொழில் நுட்பம். பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இம்மாதிரிப் பள்ளிகளில் இந்திய அளவில் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணாக்கர்களுக்கு வழிகாட்டப்படுகிறது.
அந்த வகையில் நாகப்பட்டினம் அரசு மாதிரிப் பள்ளியில் இவ்வாண்டு நடத்தப்பட்ட பயிற்சியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வு (NEET)-ல் 556/720 பெற்ற திரு.கே.வீரதரன் என்ற மாணவன் மாநில மாதிரிப் பள்ளிகளில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மேலும் செல்வி.சு.வைஷாலி என்ற மாணவி 413/720 மதிப்பெண்கள் பெற்று இளநிலை மருத்துவப் படிப்பிற்கு தகுதிபெற்றுள்ளார். மேலும் National institute of fashion technology-ல் சேர்ந்து பயில்வதற்கு போட்டித் தேர்வு எழுதிய நாகப்பட்டினம் அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றள்ளனர். இந்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் Footwear Design and Development institute -ல் சேர்ந்து பயில்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களில் நாகப்பட்டினம் அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர்.
இவர்களுக்கான கலந்தாய்வுக் கட்டணம் ரூ.25,000/- வீதம் அரசுத் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற நாகப்பட்டினம் அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.மா.கா.சே.சுபாஷி மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் மு.ஜெகதீசன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.