மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (20.05.2024) நடை பெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்திய வானிலை மையத்திலிருந்து வரப்பெறும் கனமழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் கீழ்நிலை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறையினர் நீர்நிலைகளை தூர்வாரி மழைநீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்களை சரி செய்ய வேண்டும். மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களை வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஜெனரேட்டர்கள், பம்பு செட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசரகால உபகரணங்களை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.