மரக்கன்றுகளை நட்டு வைத்த கலெக்டர் !
க.கற்பகம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம் – மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திம்மூர் ஊராட்சியில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான 13 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் அவர்கள் இன்று (03.07.2024) பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக க.கற்பகம் பொறுப்பேற்றதில் இருந்து, மாவட்டத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுவது, அரசு நிலங்கள் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவற்றை மீட்டெடுத்து அந்த இடத்தில் மரக்கன்றுகள நடும் பணியினை மேற்கொண்டு வருகின்றார்.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக வட்டம் வாரியாக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆலத்தூர் வட்டத்தில் 25 இடங்களில் 25.92 ஏக்கரும், பெரம்பலூர் வட்டத்தில் 16 இடங்களில் 47.16 ஏக்கரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 29 இடங்களில் 55.55 ஏக்கரும், வேப்பூர் வட்டத்தில் 12 இடங்களில் 56.17 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 82 இடங்களில் 184.81 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் திம்மூர் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 13 ஏக்கர் பரப்பளவிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி ஏரியாக இருந்ததாகவும், பின்னர் சிலரால் அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பருத்தி, மக்காச்சோளம் பயிர்கள் பயிரிடப்பட்டும் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் அந்த 13 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றிலும் கரை அமைக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட நிலத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் அங்கு முதற்கட்டமாக சுமார் 300 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். அரசுக்குச் சொந்மான நிலங்களை மீட்டெடுத்து மரக்கன்றுகள் நடுவதற்கு துரிதமாக பணியாற்றிய ஆலத்தூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
முன்னதாக கொளக்காநத்தம் பாலம் மற்றும் கொளத்தூர் பாலத்தின் அடியில் நீர்வழிப் பகுதியினை சிலர் ஆக்கிரமித்து பயிரிட உழவு ஓட்டியிருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு ஆவணங்களின்படி அரசுக்குச் சொந்தமான நிலம் எதுவரை உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து, தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை மீட்டெடுத்து மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவிட்டார்.