பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆட்சியர் சரயு வேண்டுகோள்.

ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேணடும் என மாவட்ட ஆட்சியர் சரயு வேண்டுகோள் விடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் நடைபெற்றது

. மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வெளியாகியுள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த கல்வி ஆண்டும் ஒவ்வொரு மாணக்கரும் சிறப்பாக பாடதிட்டங்களை படிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கல்வி ஆண்டில் பள்ளி வயதுடைய குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இளைஞர் கலை திருவிழா நடத்தி மாணவர்களின் ஆளுமை திறனை வெளி கொண்டுவர வேண்டும். இந்த கல்வி ஆண்டில் தோல்வி அடைந்த மாணவர்களை துணை தேர்வுக்கு விண்ணப்பித்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி அனைவரையும் தேர்ச்சி பெற செய்து உயர் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் முற்றிலும் பயன்படுத்தாமல் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும். 10,11 மற்றும் 12 ம்வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

ஆசிரிய பெருமக்கள் தான் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர்களாக இருந்து மாணவர்களை வழிநடத்த வேண்டும். பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை தொடர் கல்வி கற்க ஆசிரிய பெருமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, கோவிந்தன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் .ஹேமலதா, உதவி திட்ட அலுவலர் வடிவேலு, நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story